உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்

அறிமுகம்:

தமிழரின் தொன்மையையும் உயர் தனிச் சிறப்பினையும் விளக்கும் இலக்கியங்களாகத் தமிழ்க் காப்பியங்கள் திகழ்கின்றன. கன்னித்தமிழ்க் காப்பியங்களை உலகறியச் செய்யும் நோக்கில் செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மலேசியாவைத் தலைமையிடமாய்க் கொண்டு இயங்கி வருகின்றது. அமெரிக்கா, இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு காப்பியப் பணியாற்றி வருகின்றது. பழந்தமிழ்க் காப்பியங்களின் சுவடிகள், பதிப்புகள், உரைகள், ஆய்வு நூல்கள், ஆய்வேடுகள் முதலியவற்றை மின்னிலக்கமாக்கும் நோக்கில் “காப்பியகம்” என்னும் அமைப்பையும் காப்பியங்களின் ஆய்வுச் சிந்தனைகளைத் தாங்கிய பன்னாட்டுக் காலாண்டிதழைக் “காப்பியம்” என்னும் பெயரிலும் தொடங்கியுள்ளது.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க் காப்பியங்களை உலக இலக்கியங்களாக உயர்த்தும் நோக்கில் தொடர்ந்து உலகத் தமிழ்க் காப்பிய மாநாட்டை நடத்திவருகின்றது. முதல் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாம் மாநாட்டைத் தமிழ்க்கூடல் நகராகிய மதுரையில் நடத்தவுள்ளது. இந்நிறுவனத்தின் கல்வியியல்தொழில்நுட்பப் பிரிவு தமிழிணையம் வளர்க்கும் பணியைத் தலையாயப் பணியாகக் கொண்டள்ளது. அப்பிரிவே உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துத் தமிழ்த்தொழில்நுட்பத்தை எளிய முறையில் தமிழர்கள் அனைவருக்கும் சென்று சேரும்வகையில் ”உலகத் தமிழிணைய மாநாடு – 2017″ கோலாலம்பூரில் ஆகத்து25,26,27 ஆகிய மூன்று நாள்கள் நடத்தவுள்ளது.
நிறுவனத்தின் நோக்கம்:

தமிழின் தொல்லிலக்கியங்களான காப்பியங்களை உலக அரங்கில் பொதுமையாக்கப்படுவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். நாடகம், குறும்படம், இசைப்பாக்கள், கதை என்று கலையும் கணினிமையும் சங்கமிக்கும் காலத்திற்கேற்ற மின்னிலக்க வடிவில் காப்பிய இலக்கியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டு இயங்குகின்றது. மக்கள் போற்றும் இலக்கியங்களாகக் காப்பியங்களை எளிமைப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டுவருகின்றது.

“தமிழ்க் காப்பியங்களில் வேரூன்றியுள்ள தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், வரலாறு, கலை முதலியவற்றை இயல், இசை, நாடகம், மின்னிலக்கம் வடிவில் உலகத் தமிழர்கள் அனைவரும் அறியச் செய்தல்” என்பதை இலக்காகக் கொண்ட நிறுவனம். தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான நிறுவனம் அன்று. உலகத் தமிழர்கள் அனைவருக்குமான காப்பியத்தமிழ் நிறுவனமாகும். கடையேனுக்கும் கடைக்கோடியில் வாழும் தமிழனுக்குமான எளிய தமிழ் நிறுவனம் ஆகும்.

Please follow and like us:

Enjoy this blog? Please spread the word :)